செயலில் விழிப்புணர்வு

நீங்கள் எங்களிடம் எல்லாவற்றைப்பற்றியும் விழிப்புணர்வு கொள்ள சொன்னீர்கள். ஒவ்வொன்றை பற்றியும் ஒவ்வொரு செயலிலும் சாட்சியாக இருக்க கூறினீர்கள்.ஆனால் வேலை செய்யும்போது விழிப்போடு இருக்க நான் முடிவெடுத்தாலும், வேலை செய்யும்போது விழிப்புணர்வை மறந்து விடுகிறேன். பின் நினைவு வரும்போது நாம் விழிப்புணர்வோடு இல்லை என்பது என்னுள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

வேலை செய்யும் போது விழிப்புணர்வோடு இருக்க முயற்சி செய்யும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் அடிப்படையான பிரச்னைதான் இது. ஏனெனில் வேலை எனும்போது நீ உன்னை முழுமையாக மறந்துவிட நேரிடும். நீ அதில் முழுமையாக ஆழமாக ஈடுபட வேண்டும்…….நீ இல்லாமல் போகும் அளவு. அந்த அளவு ஈடுபாடு இல்லையென்றால் அந்த வேலை மேலோட்டமானதாகத்தான் இருக்கும்.

மனிதனால் உருவாக்கப்பட்ட சிறப்பானது எதுவாக இருந்தாலும் – ஓவியம், கவிதை, சிற்பம், கலை அல்லது வாழ்வின் பரிமாணம் எதுவாக – நீ அதில் முழுமையாக இருக்க வேண்டும். அதே சமயம் நீ விழிப்புணர்வோடு இருக்க முயற்சி செய்தால் உனது காரியம் முதல்தரமானதாக இருக்காது, ஏனெனில் நீ அதில் இல்லை. ஆகவே காரியம் செய்யும்போது விழிப்புணர்வோடு இருப்பதற்கு விடா முயற்சியும் பொறுமையும் தேவை.

ஆகவே ஒருவர் மிகச் சிறிய விஷயங்களில் இருந்து துவங்க வேண்டும். உதாரணமாக நடப்பது – நீ நடக்கலாம், அதே சமயம் நாம் நடக்கிறோம் என்ற விழிப்புணர்வோடும் இருக்கலாம் – ஒவ்வொரு அடியையும் விழிப்புணர்வோடு எடுத்து வைக்கலாம். சாப்பிடுவது – ஜென் மடாலயங்களில் அவர்கள் டீ குடிக்கும் விதத்தில், அவர்கள் அதை டீ தியானம் என்றழைக்கின்றனர். ஏனெனில் ஒவ்வொரு துளி டீயையும் அவர்கள் கவனமாகவும் விழிப்போடும் பருகுகின்றனர்.

இவை சிறிய செயல்கள். ஆனால் இவைகளிலிருந்து ஆரம்பிப்பது நல்லது. யாரும் ஓவியம் வரைவது, ஆடுவது போன்ற செயல்களிலிருந்து ஆரம்பிக்கக் கூடாது. அவைகள் மிகவும் ஆழமான மற்றும் சிக்கலான செயல்கள். உன்னுடைய அன்றாட வாழ்வின் சிறிய செயல்களிலிருந்து ஆரம்பி. நீ மேலும் மேலும் விழிப்புணர்வு உன்னுடைய சுவாசம் போல இயல்பானதாக மாறும் அளவு அதனுடன் பழக்கப்பட்ட பின் – நீ அதற்காக எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை, அது தானாகவே இயல்பாக நடக்கும் என்பது போல ஆன பின் – எந்த செயலிலும் எந்த வேலையிலும் நீ விழிப்புணர்வோடு இருக்கலாம்.

ஆனால் ஒரு நிபந்தனை. அது முயற்சியற்று இருக்க வேண்டும், தானாகவே இயல்பானதாக வர வேண்டும். பின் ஓவியம் வரைவதோ, இசையமைப்பதோ, ஆடுவதோ, அல்லது கையில் கத்தியுடன் எதிரியுடன் சண்டையிடுவதோ கூட நீ முற்றிலும் விழிப்போடு செய்யலாம். ஆனால் இந்த விழிப்புதன்மை நீ அடைய நினைக்கும் விழிப்புணர்வு அல்ல. இது ஆரம்பம் அல்ல. இது தொடர் ஒழுங்கு முயற்சியின் தொகுப்பே.

அன்றாட வாழ்வில் முதலில் நீ சாதாரண விஷயத்தை கடைபிடிக்க வேண்டும். உன்னுடைய ஆழமான ஈடுபாடு தேவையில்லாத செயல்களில் கவனத்தை கொண்டு வர வேண்டும். நீ நடந்து கொண்டே யோசித்துக் கொண்டிருக்கலாம், நீ சாப்பிட்டுக் கொண்டே யோசித்துக் கொண்டிருக்கலாம். யோசனைக்கு பதிலாக கவனத்தை கொண்டு வா. சாப்பிட்டுக் கொண்டே இரு, கூடவே சாப்பிடுகிறோம் என்ற உணர்வோடு இரு. நட, யோசனைக்கு பதிலாக உணர்வை கொண்டு வந்து நட, அப்போது உனது நடை மெதுவாகலாம், மிகவும் அழகானதாக மாறலாம் ஆனால் இந்த சிறிய விஷயங்களில்தான் விழிப்பு சாத்தியம். மேலும் மேலும் பழக்கப்பட பட அதிக சிக்கலான விஷயங்களில் பயன்படுத்திப் பார்க்கலாம். என்றாவது ஒரு நாள் விழிப்போடு இல்லாமல் தான் இந்த செயல் செய்ய முடியும் என்ற நிலை இல்லாமல் போகும், அதே சமயம் எந்த செயலிலும் முழுமையாகவும் இருக்கும் கணம் வரும்.

ஆகவே நாம் விழிப்போடு இல்லை என்று உணரும் சமயத்திலாவது இதை நாம் உணர்கிறோமே என்று சந்தோஷப்படு. குற்றவுணர்ச்சியை பொறுத்த வரை அதற்கு என் வழிமுறைகளில் இடமே இல்லை. குற்றவுணர்ச்சி என்பது ஆன்மாவின் கேன்சர் போன்றது.

நீ ஒரு சில கணங்களுக்கு விழிப்போடு இருந்தால் கூட சந்தோஷப்படும் அளவு விழிப்புணர்வு மிகவும் பெரிய விஷயம். நீ விழிப்பை மறந்த கணங்களைப்பற்றி கவலைப்படாதே. நாம் விழிப்போடு இல்லை என்று நீ உணர்ந்த கணத்திற்கு முக்கியத்துவம் கொடு. சில மணி நேரத்திற்கு பிறகாவது விழிப்புணர்வு திரும்பி வந்தது சிறப்பானதல்லவா

உனது பார்வை கோணத்தை மாற்று. நாம் விழிப்புணர்வை மறந்து விட்டோம் என்பது உனது கவனத்திற்கு வந்தது மிகவும் அருமை. இப்போது எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் நினைவில் வைத்திரு. திரும்பவும் மறந்து விடுவாய், திரும்பவும் நினைவுக்கு வரும். ஆனால் ஒவ்வொரு தடவையும் மறந்து போகும் கால நேரம் குறைந்து கொண்டே போகும். நீ குற்றவுணர்வை தவிர்த்து விட்டால் பின் நீ விழிப்புணர்வில்லாமல் இருக்கும் நேரங்கள் சிறிதாகிக் கொண்டே போய், ஒரு நாள் அது இல்லாமலே போய் விடும். விழிப்புணர்வு என்பது சுவாசம் போன்று அல்லது இதயத்துடிப்பு போன்று இயல்பானதாக மாறி விடும். ஆரம்ப கால கட்டத்தில் வேலையை செய்யும் போது விழிப்புணர்வோடு இருப்பது என்பது முடியாத காரியம் போலத் தோன்றும். ஆனால் நான் அது முடியாத காரியம் அல்ல, மாறாக எளிதாக செய்யக் கூடிய செயல்தான் என்று உனக்கு கூறுகிறேன்.

சரியான விதத்தில் ஆரம்பி. XYZ யிலிருந்து ஆரம்பிக்காதே, ABC யிலிருந்து ஆரம்பி. ஆகவே விழிப்புணர்வு போன்ற மிக மதிப்பு வாய்ந்த ஒன்றை செய்யும்போது மிகவும் கவனத்தோடும் ஆரம்பத்திலிருந்தும் செய்ய வேண்டும், ஏனெனில் அது பிரபஞ்சத்தின் எல்லா மர்மங்களுக்கான வாயில்களையும் திறந்து விடும், அது உன்னை தெய்வீகத்தின் கோவிலுக்கு கூட்டிச் செல்லும். மெதுவாக செல். சிறிது பொறுமை மட்டுமே தேவை, இலக்கு அதிக தொலைவில் இல்லை

--- ஓஷோ

Unknown

Author & Editor

Hi,i am web developer and internet marketer.i love learning all things in the world.so,i share my leaned.

0 comments:

Post a Comment

Popular Posts